அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வரலாற்றின் துண்ப நிகழ்வுகள் -2 -

முசோலினியின் கோர முடிவு


முசோலினி சிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சி அளித்தது. தன் ஆத்ம நண்பரை விடுவிக்க முடிவு செய்தார். பகிரங்கமாக படையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பது முடியாத காரியம் என்பதை போர்க்கலையில் வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார். முசோலினியை மீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார். ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும் அவர் குடும்பத்தையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.


மனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்று பிரகடனம் செய்தார். அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமே தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். முசோலினியை பிடித்து கொலை செய்வது என்று புரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்நது கொண்ட முசோலினி அண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பி ஓட முடிவு செய்தார்.


2 ரானுவ லாரிகளில் தனது இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.


இது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி. அன்று டோங்கா நகரில் ஒரு அறையில் முசோலினியும், கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர். மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும் முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.


கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதை உணர்நது கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.

வரலாற்றின் துண்ப நிகழ்வுகள்

சதாம் தூக்கிலடப்பட்டார் செய்தி

வரலாற்றில் இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏன் ஏற்படுகின்றன

முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் மற்றம் பலர்

ஒவ்வொருவராக நாம் நினைவுபடுத்துவோம்


பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, தூக்கில் போடப்பட்டார்.
அவரிடம் கருணை காட்டும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை,
அதிபர் ஜியா நிராகரித்தார். தன் அரசியல் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சூரியனை பார்க்கவில்லை

7 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள சிறையில் பூட்டோவை அடைத்து வைத்து இருந்தார்கள். இந்த அறைக்குள் சூரிய வெளிச்சமே தெரியாது. இதை பூட்டோவின் நெருங்கிய நண்பரான பிர்ஓடா என்பவர் பூட்டோவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு கூறினார். அவர் மேலும் கூறுகையில், "பூட்டோ உணவு எதையும் சாப்பிட வில்லை. தேன் மட்டும் சாப்பிடுகிறார். சில நேரம் காபி குடிக்கிறார். இதனால் பூட்டோ உடல் எலும்பு கூடு போல இருக்கிறது. முகச்சவரம் செய்யாததால் தாடி வளர்ந்து இருக்கிறது" என்று தெரிவித்தார்.

கண் கலங்கினார்

விசாரணைக்காக ஒருமுறை பூட்டோ கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது கண் கலங்கியபடி காட்சி அளித்தார். "இந்த நாட்டுக்கு நான் எந்த தீமையும் செய்யவில்லை. என்னை சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்" என்று அவர் முறையிட்டார்.

பூட்டோவின் மன உறுதி

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதை ரத்து செய்யும்படி அதிபருக்கு கருணை மனு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை பூட்டோ ஏற்கவில்லை. கருணை மனு தாக்கல் செய்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஆகவே கருணை மனு தாக்கல் செய்யமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு தனது உறவினர்களும், நண்பர்களும் தனக்காக கருணை மனு கொடுக்கக்கூடாது என்றும் தடுத்துவிட்டார்.
ஆனால் பூட்டோவின் அக்காள் முனுவார் பூஸ்லாம் என்பவர் ஜியாவுக்கு கருணை மனு அனுப்பினார். அதனை கேள்விப்பட்ட பூட்டோ மிகவும் கோபம் அடைந்தார். சாகும் வரை அவர் தனது உறுதியில் இருந்து மாறவில்லை. தூக்கு மேடை ஏற அவர் அஞ்சவில்லை.

மனைவி மகள் கடைசி சந்திப்பு

பூட்டோவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் அமீர் பேகம். 2வது மனைவி பெயர் நசரத் இக்பாகனி. ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். பூட்டோவுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். மகன்கள் லண்டனில் தங்கி படித்து வந்தனர். பூட்டோ சிறையில் அடைக்கப்பட்டதும் மனைவி நசரத்தும், மகள் பெனாசிரும் தீவிர அரசியலில் ஈடுபட்டார்கள். இதனால் இந்த 2 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தூக்கில் போடப்படுவதற்கு முன்தினம் பூட்டோவை கடைசி முறையாக வந்து பார்க்குமாறு பூட்டோவின் மனைவி நசரத், மகள் பெனாசிர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடிதம் அனுப்பியது. அதன்படி அவர்கள் 3.4.1979 அன்று சந்தித்தனர். இதற்காக இருவரும் போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கமாக பூட்டோவை சந்திக்க மணி நேரம் தான் கொடுக்கப்படும். ஆனால் இது கடைசி சந்திப்பு என்பதால் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பூட்டோவுடன் நசரத்தும், பெனாசிரும் 3 மணி நேரம் தங்கி இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் சந்திப்பதற்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் வேனுக்குள் இருந்த நசரத், பெனாசிர் இருவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தனர். பூட்டோவை பார்க்கச்சென்ற குடும்பத்தினர் கதறி அழுதபோது, "எனக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். தூக்கு மேடை ஏற நான் பயப்படவில்லை" என்று பூட்டோ கூறினார்.

உலக நாடுகளை புறக்கணித்த ஜியா

பூட்டோவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதுமே அவர் உயிரைக் காப்பாற்ற உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் அனுப்பிய கடிதங்களை அதிபர் ஜியா பார்க்கவே இல்லை. பாகிஸ்தானின் வெளிநாட்டு இலாகா அலுவலகத்திலேயே அந்த கடிதங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பூட்டோவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஜியா குறியாக இருந்தார். பூட்டோ தூக்கிலிடப்படுவது உறுதி செய்யப்பட்டபின், செவ்வாய்க்கிழமை இரவும் சில வெளிநாட்டு தலைவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ரஷியா, சுவீடன், சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாட்டுத் தலைவர்கள் கடைசி நிமிடத்தில் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அவசர செய்திகளை அனுப்பி வைத்தனர். பிரான்சு ஜனாதிபதி அவசர தந்தி அனுப்பினார். ஆனால் அவைகள் எல்லாவற்றையுமே அதிபர் ஜியா அடியோடு புறக்கணித்துவிட்டு பூட்டோவை தூக்கில் போட்டார்.

தூக்கில் போடப்பட்டபோது பூட்டோவுக்கு 51 வயது தான்.

பூட்டோவை தூக்கில் போடப்பட்ட செய்தியையும் பாகிஸ்தான் உடனடியாக அறிவிக்கவில்லை. உடலை அடக்கம் செய்தபின்பு 30 நிமிடம் கழித்து பகல் 11.30 மணிக்கே ரேடியோ மூலம் அறிவித்தது.

இரவோடு இரவாக

பொதுவாக, சூரியன் உதிக்கும் நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் பூட்டோவை இரவோடு இரவாக தூக்கில் போட்டு உடலை விடிவதற்கு முன்பே சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டனர். உடல் கொண்டுபோகப்பட்ட விமானத்தில் ராணுவத்தின் காவல் பலமாக இருந்தது.

கடைசி நேரம்

தூக்கில் போடப்படுவதற்கு முன்னால் பூட்டோ குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில வாரங்களாக அவர் சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் தாடி வளர்ந்து இருந்தது. சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிலில் கையெழுத்து போடும்படி அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி அவர் கையெழுத்துப் போட்டார்.

கைகளை கட்டினார்கள்

பிறகு, பூட்டோவின் கைகளை பின்புறமாக கட்டினார்கள். அதன் பின் பூட்டோ தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறை அதிகாரிகள், ஒரு ராணுவ அதிகாரி, ஒரு மாஜிஸ்திரேட்டு ஆகியோர் உடன் சென்றனர். இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு பூட்டோ தூக்கில் போடப்பட்டார்.

25 ரூபாய் கூலி

பூட்டோவை தூக்கில் போட்டவரின் பெயர் தாரா மஷியா. இவர் பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவர். தூக்குப்போடுவதையே பரம்பரை தொழிலாக செய்து வந்தவர். அவருக்கு கூலியாக 25 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு ஒரு ராணுவ லாரி சிறைச்சாலைக்குள் சென்றது. உடனடியாக பூட்டோ உடலை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்துக்கு சென்றது. பூட்டோ உடல், சிந்து மாநிலத்தில் உள்ள சுக்கூர் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்துக்கு கொண்டு போகப்பட்டது.

தந்தைக்கு அருகில்

பூட்டோ உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், சிந்து நதிக்கரையில் உள்ளது. பூட்டோவின் தந்தை ஷாநவாஸ் உடல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பக்கத்திலேயே பூட்டோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் நடந்த இடத்துக்கு முதல் மனைவி அமீர் பேகம் வந்திருந்தார். அவர் முஸ்லிம் சம்பிரதாயப்படி முகம் முழுவதையும் மூடி `பர்தா' அணிந்திருந்தார். உடல் அடக்கம் முடிந்ததும் உறவினர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

உலக தலைவர்கள் கண்டனம்

பூட்டோவை தூக்கில் போட்டதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இங்கிலாந்து பிரதமர் கல்லகன் இதுபற்றி கூறியதாவது:

"பூட்டோவை தூக்கில் போட்டது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன். பூட்டோவுக்கு மன்னிப்பு வழங்கும்படி 3 முறை வேண்டுகோள் விடுத்தேன். அதை அலட்சியம் செய்துவிட்டனர்."

இந்திரா காந்தி கூறியதாவது:

"இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை தருகிறது. பூட்டோவை கொல்ல வேண்டாம் என்று உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஜியா மதிக்காமல் நடந்து கொண்டார்.
பூட்டோவை தீர்த்துக்கட்டும் இந்த முடிவுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் காரணமாகும்.
பூட்டோவின் மனைவி நசரத்துக்கும், மகள் பெனாசிருக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1972.ல் சிம்லாவில் பெனாசிர் என்னை சந்தித்து உரையாடியதை நினைத்து கண் கலங்குகிறேன்.
பாகிஸ்தான் மக்களுக்கும் என் துயரத்தை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு இந்திரா காந்தி கூறியிருந்தார்.

43 வது ஆண்டு நினைவு அஞ்சலி


புயலால் அழிந்த தனுஷ்கோடியில் 43 வது ஆண்டு நினைவு அஞ்சலி


1964_
ம் ஆண்டு டிசம்பர் 23_ந்தேதி, தென் தமிழ்நாட்டை பயங்கர புயல் தாக்கியது. அப்போது தனுஷ்கோடி கடலில் மூழ்கிவிட்டது. 1,500 பேர் பலியானார்கள்.


தமிழ்நாட்டில் பல்வேறு சமயங்களில் பெரும் புயல் வீசியிருக்கிறது. எனினும், 1964 டிசம்பரில் வீசிய புயல், வரலாறு கண்டறியாத அளவுக்கு பயங்கரமாக இருந்தது.


கடல் புகுந்தது


மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது.


புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது. தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின. திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள, தனுஷ்கோடிக்குள் புகுந்தது.


1,000 பேர் சாவு


அந்த சமயத்தில், தனுஷ்கோடி ரெயில் நிலையத்திலும், சுங்க இலாகா பரிசோதனை நடைபெறும் இடத்திலும் சுமார் ஆயிரம் பேர்கள் இருந்தனர்.


அவர்களில் 500 பேர் செத்திருக்கவேண்டும் என்று முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால், தனுஷ்கோடி அடியோடு அழிந்து, கடலில் மூழ்கி விட்டதால், சாவு எண்ணிக்கை 1,000_க்கு மேல் இருக்கும் என்று பின்னர் மதிப்பிடப்பட்டது.


பாம்பன் பாலம் நாசம்


தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும்.


இந்த அதிசயப் பாலம், பலத்த சேதம் அடைந்தது.


ரெயில் மூழ்கியது


புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது.


தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது.


எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கியபோது, ரெயிலும் கடலில் மூழ்கியது.


ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


40 மாணவர்கள் பலி


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர்.


கடலில் மூழ்கிய ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது. அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள்.


கட்டிடங்கள் இடிந்தன


தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன.


தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை.


மக்கள் தவிப்பு


கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள், மணல் திட்டுகளில் தவித்தனர்.


அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன.


விமானத்தில் குடிதண்ணீர்


ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. புயல்_மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது.


உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது. விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன.


உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்.


"சாரதா" என்ற கப்பல், தனுஷ்கோடிக்குச் சென்று 135 பேர்களை காப்பாற்றியது. அவர்கள், மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கரையில் இறக்கி விடப்பட்டனர்.


தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு 4 நாட்கள் ஆயின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும், பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன.


அதிசய பாலம்


புயல்_கடல் கொந்தளிப்பால் சேதம் அடைந்த பாம்பன் பாலம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதை, 1914_ம் ஆண்டில், தென் இந்திய ரெயில்வே தலைமை என்ஜினீயராக இருந்த ஒசன்சே என்ற வெள்ளைக்காரர் அமைத்தார்.


இந்தப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம்தான் ராமேசுவரத்துக்கு போகவேண்டி இருந்தது.


6 ஆயிரம் அடி


இந்தப்பாலம் 6,700 அடி நீளம் கொண்டது.


இதை அமைக்க 2,600 டன் இரும்பு செலவாயிற்று. கட்டி முடிக்க 1 ஆண்டு பிடித்தது.


முன் காலத்தில், ராமேசுவரம் தனித்தீவாக இருக்கவில்லை. தமிழ்நாட்டுடன் சேர்ந்தே இருந்தது.


1573_ம் ஆண்டில் பெரும் புயல் அடித்து, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது ராமேசுவரம் பகுதி துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறிவிட்டது. அதன்பின், பாம்பன் பாலம் கட்டப்படுகிறவரை, படகு மூலமாகவே மக்கள் ராமேசுவரம் போய் வந்தார்கள்.


பிணங்களை கழுகுகள் தின்றன


தனுஷ்கோடிக்கு நேரில் சென்ற "தினத்தந்தி" நிருபர் தெரிவித்த தகவல் வருமாறு:-


"நானும், என் நண்பர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தனுஷ்கோடிக்கு சென்றோம். பல இடங்களில் நீந்திச் சென்றோம்.


கடலில் மூழ்கிய ரெயிலில் 300 பேர் இருந்ததாக தெரியவருகிறது. அவ்வளவு பேரும் பலியாகிவிட்டார்கள். என்ஜினுக்கு கீழே டிரைவரின் பிணம் கிடந்தது.


கடலில் பிணங்கள் மிதக்கின்றன. நாங்கள் 50 பிணங்கள் வரை எண்ணினோம். பிணங்களை கழுகுகள் கொத்தித்தின்ற கோரக்காட்சியைக் கண்டு மனம் பதறியது. எங்கு போனாலும் பிண நாற்றம் தாங்க முடியவில்லை.


1,000 பேருக்கு மேல்


தனுஷ்கோடியில் வசித்த சுமார் 2 ஆயிரம் பேரில், பாதிக்கு மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டார்கள். உயிர் தப்பியவர்கள் கதறி அழுவதைப் பார்க்கும்போது, நெஞ்சம் உருகுகிறது.


சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். பலர் குடும்பத்தோடு ராமேசுவரத்தை நோக்கி நடந்து செல்கிறார்கள்.


ராமேசுவரம் தெருக்களில் உடைந்த படகுகள் கிடக்கின்றன. மழையில் உடைமைகள் அனைத்தையும் இழந்த ஒருவர், கட்டிக்கொள்ள வேட்டி இல்லாமல், இறந்து போன தன் மனைவியின் சேலையால் உடம்பை மூடி மறைத்துக்கொண்டு அழுத காட்சி கல் மனதையும் கரையச் செய்வதாய் இருந்தது."


இவ்வாறு நிருபரின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


குழிகளில் பிணங்களை புதைத்தனர்


இறந்தவர்களில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 100 பெயர்கள் அடங்கியிருந்தன.


அடையாளம் தெரியாத, அழுகிப்போன பிணங்களை பெரிய குழிகளைத் தோண்டி புதைத்தார்கள். 28_ந்தேதி வரை 150 பிணங்கள் புதைக்கப்பட்டன.


இலங்கையிலும் சேதம்


தனுஷ்கோடியை புயல் தாக்கிய அதே நேரத்தில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரப்புயல் வீசியது. (இந்தப் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.)


தலைமன்னார் பகுதியில் 1,500 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களில் பலருடைய பிணங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கரை ஓரப்பகுதிகளில் ஒதுங்கிக் கிடப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.


ராணி துயரம்


தனுஷ்கோடியில் கடும் புயல் வீசி, கடல் கொந்தளிப்பில் நூற்றுக்கணக்கான பேர் பலியான செய்தி அறிந்து, இங்கிலாந்து ராணி எலிசபெத் துயரம் அடைந்தார். ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு அனுதாப செய்தி அனுப்பினார்.


ஜெமினி - சாவித்திரி தப்பினார்கள்


புயல் வீசிய நேரத்தில் நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் ராமேசுவரத்துக்கு சென்றிருந்தார்கள்.


அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரிதும் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர்.


சாவித்திரியும், ஜெமினிகணேசனும் அதிசயமாக உயிர் தப்பிய தகவல், மறுநாள்தான் தெரிய வந்தது.

காமராஜ் மதிய உணவு திட்டம்

.காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் நடந்த கல்விப்புரட்சி

காமராஜர் "கல்வி வள்ளல்" என்றும், "கல்விக்கண் திறந்த வர்" என்றும் புகழப்படுவதற்குக் காரணம், 1956-ம் ஆண்டு அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமாகும்.


1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு" நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடி வேலு அமர்ந்திருந்தார்.


தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று, சுந்தர வடிவேலுவிடம் காம ராஜர் விசாரித்தார்.


"தொடக்கப்பள்ளி களில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர் களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார்.


மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.


அவர் கூறியதாவது:-


"தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும்.


பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.


அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும்.


இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல.


தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்."


இவ்வாறு காமராஜர் கூறினார்.


அமைச்சரவை ஆலோசனை


மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந் தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார்.


முடிவில் சத்துணவு திட் டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட் டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறிய தாவது:-


"அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்.


எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்."


இவ்வாறு காம ராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆர வாரம் செய்தனர்.


15 லட்சம் பேர்


1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது.


15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.


பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.


மதிய உணவு திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.


1954-ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962-ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது.


இதேபோல் 1954-ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964-ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது.


இலவச கல்வி


எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவச கல்வித் திட்டத்தை 1960-ல் காமராஜர் கொண்டு வந்தார்.


ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200-க்கு குறைவாக வரு மானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது.


1962-ம் ஆண்டில், "வரு மான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவச கல்வி" என்று காமராஜர் அறிவித்தார்.


1963-ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டது.

காமராஜர் பேச்சு

டிஸ்கவரி ஓடத்தில் இந்திய பெண்


வினாயகர் சிலை கீதை புத்தகத்துடன் வின்னில் சென்றார் சுனிதா

கேப் கெனவரல்: இரண்டு நாள் தாமதத்திற்கு பிறகு "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஏழு விஞ்ஞானிகள் அதில் பயணம் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லத் தயாராக இருந்த "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த வியாழன் அன்று இதற்கான "கவுன்ட் டவுன்' துவக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் "டிஸ்கவரி'யை செலுத்த முடியவில்லை.

இரண்டு நாள் தாமதத்திற்குப் பின், இந்திய நேரப்படி காலை 7.17 மணியளவில், அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விண்கலத்தில் இணைக்கப்பட்ட "ராக்கெட் பூஸ்டர்கள்' வெற்றிகரமாக தனித்தனியே பிரிந்தன. ரூ.50 கோடி மதிப்பிலான சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பொருட்கள் இதில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த விண்கலத்தில் இந்திய வம்சாவளி பெண் சுனிதா வில்லியம்ஸ்(41), ஸ்வீடன் நாட்டின் முதல் விண்வெளி வீரர் மார்க் போலன்ஸ்கி, கிரிஸ்டர் பக்லசெங், வில்லியம் டெபலைன், ராபர் குர்ஹம், நிகோலஸ் பேட்ரிக், ஜான் ஹிக்கிங்பாதம் ஆகிய ஏழு பேர் பயணம் செய்கின்றனர். சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஐந்து பேர் முதன் முறையாக விண்வெளி பயணம் செய்கின்றனர்.

விண்வெளி மையத்தில் புதிய மின்சாதன உபகரணங்களை இணைப்பது, பழுது பார்த்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை இவர்கள் மேற்கொள்ள உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் தவிர மற்ற விஞ்ஞானிகள் வரும் 21ம் தேதி "டிஸ்கவரி' விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஜெர்மனி விஞ்ஞானி தாமஸ் ரெய்டருக்கு பதிலாக சுனிதா வில்லியம்ஸ் ஆறு மாதம் அங்கு தங்கியிருந்து, கட்டுமான பணிகளில் ஈடுபடுகிறார்.

கடந்த 2003ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட "கொலம்பியா' விண்கலம், தரையிறங்குவதற்கு முன்னதாக அதன் வெளிப்புற பகுதியிலிருந்து ஒரு தகடு கழன்று விழுந்ததால், வெப்பம் தாங்காமல் விண்கலம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் இந்தியவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விஞ்ஞானிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மூன்று முறை விண்கலங்களை "நாசா' அனுப்பியுள்ளது. ஆனால், அந்த விண்கலங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி பகல் நேரத்திலேயே விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு, மீண்டும் இரவு நேரத்தில் "டிஸ்கவரி' விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லாவை தொடர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்யும் இரண்டாவது இந்திய வம்சாவளி வீராங்கனை என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.

"டிஸ்கவரி' புறப்படுவதற்கு சற்று முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் கூறுகையில்,""தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்வெளியில் நடக்க இருப்பது இதுவே முதல் அனுபவம். விண்வெளியில் இருந்தபடி பூமியை பார்ப்பதில் ஆவலாக உள்ளேன். அது வியக்கத்தக்க காட்சி,'' என்றார். கல்பனா சாவ்லா அரியானா மாநிலத்தில் பிறந்து பின்பு அமெரிக்காவில் குடியேறியவர். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண் என்பது குறிப்பிடத்தக்கது
தினமலர்